ஈரோடு மகப்பேறு மருத்துவமனை பணியாளர்களுக்கு கரோனா தொற்று : நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் மற்றும் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் மற்றும் ஊழியர் ஒருவருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோல் ஈரோடு சிதம்பரம் காலனியில் ஒரே வீட்டில் வசிக்கும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் அதே வீதியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
