சேலத்தில் 57 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு : 1,184 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை

சேலம் தொங்கும் பூங்கா கலையரங்கில் அமைக்கப்பட்டு வரும் கரோனா தற்காலிக சிகிச்சை மையத்தை, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
சேலம் தொங்கும் பூங்கா கலையரங்கில் அமைக்கப்பட்டு வரும் கரோனா தற்காலிக சிகிச்சை மையத்தை, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 57 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 1,184 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது, 57 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள், பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகர பகுதிகளில் தற்போது, 1,184 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கரோனா தற்காலிக சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று குறைந்த அளவு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் மணியனூர் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில், 110 படுக்கை வசதிகளுடனும், கோரிமேடு அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தற்காலிக சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, மணியனூர் மையத்தில் 45 பேரும், கோரிமேடு மையத்தில் 57 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கூடுதலாக தற்காலிக சிகிச்சை மையங்களை தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

வாய்க்கால் பட்டறை அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும், செரிரோடு தொங்கும் பூங்கா வளாகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கிலும் சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு 250 படுக்கை வசதி களுடன் தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் தொங்கும் பூங்கா வளாகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கத்தில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

சுகாதாரத் துறையிடமிருந்து பெறப்பட்ட நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் இவ்வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இவ் வாகனத்தை பயன்படுத்தி கரோனா பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பு அளவினை கண்டறிந்து தேவைப்படும் சிகிச்சையினை பரிந்துரைக்கும் வகையில் நோயாளிகளை வகைப்படுத்தும் தற்காலிக சிறப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in