ஈரோட்டில் 331 பேருக்கு கரோனா தொற்று :  சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு

ஈரோட்டில் 331 பேருக்கு கரோனா தொற்று : சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு

Published on

ஈரோட்டில் நேற்று 331 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத்தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதிலும், தொற்றினைக் கண்டறியும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

சராசரியாக நாள்தோறும் 2000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடந்து வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 331 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 93 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த 62 வயதான ஆண் நேற்று உயிரிழந்தார். சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு மற்றும் கரோனா தொற்று காரணமாக 21-ம் தேதி மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 197 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 ஆயிரத்து 126 பேர் குணமடைந்துள்ளனர். 1918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in