

வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, திருச்சி கிராப்பட்டியில் உள்ள மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி 40-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரி கட்டாத வீடுகளின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அலுவ லர்கள் துண்டித்து வருவதாகக் கூறி, அதைக் கண்டித்து திமுக முன் னாள் கவுன்சிலர் முத்துசெல்வம் தலைமையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் 35 பேர் உட்பட 50 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த கோ-அபிஷேகபுரம் உதவி ஆணையர் வினோத், இனி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படாது என்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறினார். ஆனால், நேரில் வந்து உறுதி அளித்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் தாமோதரன் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது, “கடந்தாண்டு கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக் கப்பட்டு, அதிலிருந்து இப்போது தான் மெதுவாக மீண்டு வருகி றோம். இப்போதும் போதிய வரு மானம் இல்லை. வாழ்க்கை நடத் தவே சிரமப்படும் நிலையில், குடிநீர் வரியை உடனடியாக கட்ட முடியவில்லை. எனவே, குடிநீர் வரியைக் கட்ட கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.