

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மேலும் இரு இடங்களில் ஆற்றுப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நேற்று முன்தினம் வரை 1,816 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்டோரும், ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோரும், 7 இடங்களில் உள்ள ஆற்றுப்படுத்தல் மையங்களில் 200-க்கும் மேற்பட்டோரும், தனியார் மருத்துவமனைகளில் 800-க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வீடுகளில் 400 பேர் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று கண்டறிய சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்.டி.பிசிஆர் பரிசோதனை மையங்களும், ட்ரூ நெட் பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் தற்போது நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் பெரியார் பல்கலைக் கழகம், சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கம் ஆகியவற்றில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில், மின் விசிறிகள் பொருத்தப்பட்டு, படுக்கைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 ஆயிரத்து 144 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.