

தஞ்சாவூரில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையொட்டி, போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் நாகை சாலையில் உள்ள அழகரசன் நகரைச் சேர்ந்தவர் இந்திரமோகன்(31). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 17-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்திரமோகன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், அதனால் யாரும் தடுப்பூசி போட வேண்டாம் என்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
இதுதொடர்பாக விசாரிக்க ஆட்சியர் ம.கோவிந்தராவ் உத்தரவிட்டதன்பேரில், வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், இந்திரமோகன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், அவரது இறப்புக்கு மாரடைப்புதான் காரணம் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபரை தேடி வருகின்றனர்.