கரோனா பரிசோதனைக்குப் பிறகே - வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் அனுமதி : தூத்துக்குடி ஆட்சியர் வலியுறுத்தல்

கரோனா பரிசோதனைக்குப் பிறகே  -  வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் அனுமதி :  தூத்துக்குடி ஆட்சியர் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக, அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் பேசியதாவது:

தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இடத்துக்கு தகுந்தவாறு குறைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் அனைவரும் ஏப்ரல் 29-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வழங்க வேண்டும். அதன்பிறகே நுழைவு பாஸ் வழங்கப்படும். வேட்பாளர்களும், முகவர்களும் கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். முகவர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களால் சானிடைசர் வழங்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கைமேஜை அருகில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு, காலை, மதியம், இரவுநேரங்களில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் இருந்து முன்பணம் பெற்று உணவு வழங்கப்படும்.

மின்னணு அஞ்சல் முறை மூலம் பெறப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிக்காக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு, கணினி மூலமாகமாதிரி வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணி முழுவதும் தலைமைதேர்தல் அலுவலர் கண்காணித்திடும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்காகவாக்கு எண்ணும் அரங்கில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படும் என்றார் ஆட்சியர்.

நாகர்கோவில்

ஆட்சியர் பேசியதாவது: வாக்குஎண்ணிக்கை 14 மேஜைகளில் நடைபெறும். தலா ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவர். 257 கண்காணிப்பு கேராக்களும், 300 வெப்காஸ்டிங் கேமராக்களும் பொருத்தப்படும். அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் பெயர் மற்றும்முகவரியை வரும் 27-ம் தேதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்கள், முகவர்கள் 48 மணி நேரத்துக்குள் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்து கரோனா தொற்று இல்லைஎன்ற அறிக்கையுடன் வரவேண்டும்.

காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர வேண்டும்.காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in