5 மாதங்களுக்கு மேலாக பணி வழங்காததை கண்டித்து -  தொழிலாளர்கள் சாலை மறியல் :  கலசப்பாக்கம் அருகே சலசலப்பு

5 மாதங்களுக்கு மேலாக பணி வழங்காததை கண்டித்து - தொழிலாளர்கள் சாலை மறியல் : கலசப்பாக்கம் அருகே சலசலப்பு

Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்காததைக் கண்டித்து கலசப்பாக்கம் அருகே கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் குக்கிராமமான சீனந்தல் கிராம மக்களுக்கு பணி வழங்கவில்லை எனக் கூறி, மேல்சோழங்குப்பம் – போளூர் சாலையில் கிராம மக்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், “கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பணி வழங்காமல் உள்ளனர். இது தொடர்பாக முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால், வேலை இல்லாமல் பல குடும்பங்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட பணியும் வழங்கவில்லை என்றால் ஏழை குடும்பங்களால் என்ன செய்ய முடியும். எங்கள் பகுதி மக்களுக்கும் பணி வழங்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த கடலாடி காவல்துறையினர் விரைந்து வந்து சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய லட்சுமி, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “காந்தபாளையம் ஊராட்சி என்பது பெரிய ஊராட்சி என்பதால், சுழற்சி முறையில் பணி வழங்கப்படுகிறது. இதனால், உங்களுக்கு பணி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கடை நிலையில் பணியாற்றுபவர் களாலும் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் செய்த தவறுகள் கண்டறியப்பட்டு, சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு விரைவாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையடுத்து. சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in