திருமண மண்டபங்களில் 50 சதவீத இருக்கைகளில்: மக்களை அனுமதிக்க வேண்டும்: மண்டப உரிமையாளர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருமண மண்டபங்களில் 50 சதவீதஇருக்கைகளில் மக்களை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் சிறிய, நடுத்தர, பெரிய என மூன்று வகைகளில் 3,750-க்கும் மேற்பட்ட திருமணமண்டபங்கள் உள்ளன. தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், திருமண மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் கூடும் பார்வையாளர்கள் எண்ணிக்கை 100 பேருக்கு உள்ளாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் என திருமண மண்டப உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கை என்.முத்து ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

திருமண மண்டபங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை நம்பி, உரிமையாளர்கள், ஊழியர்கள், பல்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் என மாநிலம் முழுவதும் ஏறத்தாழ3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சியே இவர்களின் முக்கிய வருவாய். வங்கிக்கடன் கட்டுவதற்கும், ஊழியர்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சியையே நம்பி உள்ளோம். மண்டபத்தின் அளவைப் பொருத்து ஒவ்வொரு மண்டபத்திலும் 5 முதல் 25 பேர் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். தற்போது கரோனா தொற்று பரவலால், திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும்என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

இதன் மூலம் இத்துறையை நம்பியுள்ள பல்துறை தொழிலாளர்களின் வருவாய் பாதிக்கப்படும். திருமண மண்டபங்களில் முகூர்த்த நேரங்களில், ஏறத்தாழ 10 நிமிடங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அதிகம் பேர் மண்டபத்தில் இருப்பர்.அதன்பின்னர், மண்டபங்களில் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். திருமண மண்டபங்களில் தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படும். எனவே, திருமண மண்டபங்களில் மொத்தம் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் அளவுக்கு மக்களைஅனுமதித்து சுப நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in