ஊரடங்கின் போது - தனியார் தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஊரடங்கின் போது தனியார் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரியில்  நடந்த  ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசினார்.
ஊரடங்கின் போது தனியார் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசினார்.
Updated on
1 min read

ஊடரங்கின் போது தனியார் தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஊரடங்கின் போது தனியார் தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. பொது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் 30-ம் தேதி நள்ளிரவு, 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின் போதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக பணியாளர்களுக்கு உரிய அடையாள அட்டை அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் கரோனா தொற்று தொடர்பான தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான, தொழிற்சாலை நுழைவு வாயில்களில் கை கழுவும் வசதி, கிருமி நாசினிகள் தெளித்தல், பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் ஆகியவற்றினை உறுதிபடுத்த வேண்டும். மேலும், தொழிற்சாலை நிறுவனங்களின் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் தொடர்பு கொண்டு தடுப்பூசிகளின் இருப்புநிலை அறிந்து தங்களது பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, தொழிற்சாலைகள் இணை இயக்குநர் சபீனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in