இரவு நேர ஊரடங்கு எதிரொலி - விசைத்தறிகள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலையிழப்பு :

இரவு நேர ஊரடங்கு எதிரொலி  -  விசைத்தறிகள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலையிழப்பு :
Updated on
1 min read

இரவு நேர ஊரடங்கால், ஈரோட்டில் விசைத்தறிகள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், வெளி மாநிலங்களில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு ஆர்டர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விசைத்தறிகள் இயக்கம் பாதிக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு ஷிப்ட் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இரவு நேர ஊரடங்கு காரணமாக விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாகக் குறைக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இரவு நேர ஷிப்ட் இயங்காததால், 12 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்றும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in