

ஈரோட்டில் குழந்தைகளை பெற்றோர் கொடுமைப்படுத்தி, நரபலி கொடுக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில், குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா ஆகியோர், தங்களது இரு மகன்களை கொடுமைப்படுத்துவதாகவும், நரபலி கொடுக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிறுவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் போரில் ஈரோடு தாலுகா போலீஸார் 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிறுவர்களின் பெற்றோர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோர் கொண்ட தனி அமர்வு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உத்தரவிட்டார். இதன்படி, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவரது உறவினர்களிடம் நேற்று ஆணைய உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஈரோடு தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு தொடர்பான ஆவணங்களை அவர்கள் பார்வையிட்டனர். விசாரணையின்போது, மாவட்ட குழந்தை நல அலுவலர் பிரியா தேவி, குழந்தைகள் நல அமைப்பு தலைவர் அசோக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விசாரணை குறித்து குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட குழந்தைகள் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா, போலீஸார் மூலம் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா, குழந்தைகள் நலக்குழுவினர் முறையாக விசாரணை நடத்தினார்களா என்பது குறித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. மேலும், குழந்தைகளுக்கு இன்றைக்கு தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளோம். இதனை அறிக்கையாக ஆணையத்தில் சமர்பிப்போம் என்றார்.