

கொடிவேரி பாசனத்துக்கு உட்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கு இன்று முதல் (22-ம் தேதி) நீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூலமாக கொடிவேரி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனப்பகுதிகளுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய் பாசனம் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. இப்பாசனத்துக்கு இன்று (22-ம் தேதி) முதல் நீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனப்பகுதிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை, 120 நாட்களுக்கு 8812.80 மில்லியன் கன அடி நீருக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொடிவேரி பாசனத்துக்கு இன்று (22-ம் தேதி) முதல் நீர் திறக்கப்படுகிறது. இதுகுறித்து கொடிவேரி பாசனசபைத் தலைவர் சுபி.தளபதி கூறியதாவது
விவசாயிகளின் வேண்டு கோளை ஏற்று, தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள நேரத்தில் கூட, விதிமுறைக்கு உட்பட்டு கொடிவேரி பாசனத்துக்கு நீர் திறப்பதற்கு பெருமுயற்சி எடுத்த தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஈரோடு ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்ஆகியோருக்கு அனைத்து பாசன விவசாயிகளின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அரசின் உத்தரவின்படி, 22-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய்களுக்கு நீர் திறக்கப்படவுள்ளது. தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பிரதான வாய்க்கால்களில் உட்புறம் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், கூகலூர் கிளை வாய்க்காலை பொறுத்தவரை இரண்டு, மூன்று இடங்களில் கரைகளை இன்னும் பலப்படுத்த வேண்டியுள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் மே 5-ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீர் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், மே 26-ம் தேதிக்குப்பின் தொடர்ச் சியாக நீர் பெறவுள்ளோம் என்றார்.