

பெருந்துறை சிப்காட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றியது தொடர்பாக, மேல் நடவடிக்கை எடுக்க, மாசுக்கட்டுப் பாடு வாரிய தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்படாத நச்சு கழிவுநீர் குழாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டது குறித்து, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் மாசுகட்டுப் பாடு வாரியத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தது. இதையடுத்து மாசுகட்டுப்பாடு வாரிய பொறி யாளர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் என்ற பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் கடந்த ஓராண்டாக செயல்பாட்டில் இல்லை. இந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக ஆய்வுமேற்கொண்டதில், கழிவுநீர் வெளியேற்றப்பட்டது கண்டறியப் பட்டது.
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திடமிருந்து விளக்கம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் மீது உரிய மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.