

இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து சேவை இல்லாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்.20-ம் தேதி முதல் ஏப்.30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு(இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்தது. இதன்படி, இரவு நேர ஊரடங்கின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டன.
மேலும், வெளியூர்களிலிருந்து திருச்சி வந்து மதுரை, திருநெல்வேலி, சென்னை, சிதம்பரம், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியவர்கள், இரவு 9 மணிக்குப் பிறகு பேருந்துகள் இல்லாததால், மத்திய பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டதால் உணவு, குடிநீர் கிடைக்காமல் பயணிகள் பலரும் அவதிப்பட்டனர். பின்னர் அதிகாலை 4 மணி வரை காத்திருந்து, பேருந்துகள் வந்த பின் ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
மேலும், மாநகரின் பல்வேறு சாலைகளிலும் போலீஸார் தடுப்பு அமைத்து இரவு 10 மணிக்கு மேல் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரித்து, இரவு நேர பொது ஊரடங்கின் முதல் நாள் என்பதால் எச்சரித்து அனுப்பினர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், அந்தந்த ரயில் வருகைக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக மட்டுமே பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால், ரயில் நிலைய வளாகத்தின் பல்வேறு இடங்களில் திறந்த வெளியில் பயணிகள் காத்திருந் தனர்.