

திருச்சி மண்டலத்தில் உள்ள சுகாதார மாவட்டங்களின் தேவைக்காக நேற்று 44,620 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் திருச்சிக்கு வந்து சேர்ந்தன. இதில், திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் 24,300 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மீதம் உள்ளவை மற்ற 5 சுகாதார மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் 82 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உட்பட 10 அரசு மருத்துவமனைகள், 42 தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் நாள்தோறும் 5,000 முதல் 6,000 பேர் வரை கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் மருந்துக் கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் முறையே 80:20 என்ற விகிதாச்சார அடிப்படையில் வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 2,830 டோஸ் கோவிஷீல்டு, 2,020 டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் இருப்பில் இருந்தன. இந்தநிலையில், திருச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல தடுப்பூசி மையத்துக்கு நேற்று 44,620 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரப் பெற்றன.
இதில், திருச்சி சுகாதார மாவட்டத்துக்கு மட்டும் 24,300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், எஞ்சியவை திருச்சி மண்டலத்தில் உள்ள அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய சுகாதார மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியில் 10,410 டோஸ் தடுப்பூசி முதலிலும், எஞ்சிய டோஸ் தடுப்பூசிகள் பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி பின்னரும் பயன்படுத்தப்படவுள்ளன.
திருச்சி மாவட்டத்துக்கு வரப்பெற்ற கோவிஷீல்டு தடுப்பூசியில், நேற்று மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, பொன்மலை ரயில்வே மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு விநியோகிக்கப்பட்டன.
வீணடிக்கும் மருத்துவமனைகள்