

கடந்த ஜனவரி மாத மழைக்கு ஏற் பட்ட பயிர்ச் சேதத்துக்கு நிவாரணம் அளிக்கக் கோரி பூதலூரில் நேற்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச் சினைக்கு தீர்வு காணப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேத பாதிப்புக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கக் கோரியும், பயனாளிகளின் பட்டியலில் உள்ள குளறு படிகளை நீக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சார்பில் பூதலூரில் நேற்று காலை 10 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந் தது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, போராட்ட இடத்துக்கு நேற்று வந்த பூதலூர் வட்டாட்சியர் ராமச் சந்திரன், திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் முற்பகல் 11 மணிக்கு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. அதன்படி, பூதலூர் வட்டத்தில் இழப்பீடு கோரி விண்ணப்பித்து, வருவாய்த் துறை மூலமாக வேளாண் துறையால் பதிவேற்றப் பட்ட பயனாளிகளின் முழு விவரப் பட்டியல் மற்றும் விண்ணப்பித்து விடுபட்ட பயனாளிகளின் பட்டியல் ஆகியவை, 2 நாட்களுக்குள் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் வழங்கப்படும். மேலும், விடுபட்ட பயனாளி களின் விவரங்களை ஒரு வாரத் துக்குள் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளைக் கொண்டு பதிவேற்றம் செய்து, விடுபட்ட அனைத்து பயனாளிகளின் வங் கிக் கணக்கிலும் இழப்பீட்டுத் தொகையை வரவு வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் அடிப்படையில், போராட்டம் கைவி டப்பட்டது.
இந்த அமைதி பேச்சுவார்த் தையில், விவசாயிகள் தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியச் செயலாளர் இரா.ராமச்சந்திரன், பூதலூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் கோ.வி.க.சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோரும், அரசுத் தரப்பில் வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.