

வெங்காயம் விதை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கீழப்பாவூர், மேலப்பாவூர், சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படும்.
வெங்காயம் விதைகள் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வாங்கிச் சென்று விவசாயிகள் விதைப்பு செய்து, நாற்று வளர்ந்த பின் நடவு செய்வார்கள். நேரடி விதைப்பாகவும் வெங்காய சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் வயல்களை உழவு செய்து விவசாயிகள் வெங்காய சாகுபடி பணிக்குஆயத்தமாகி வருகின்றனர். ஆனால், ஒரு கிலோ வெங்காயம் விதை 2 ஆயிரம் ரூபாய்க்குவிற்பனையாவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
3 மடங்கு விலை உயர்வு
இதுகுறித்து கீழப்பாவூரைச் சேர்ந்த விவசாயி சிவா கூறும்போது, “ஒரு ஏக்கரில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய 6 முதல் 8 கிலோ விதை தேவைப்படும். தற்போது ஒரு கிலோ விதை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. விதைக்கு மட்டுமே 16 ஆயிரம் ரூபாய் செலவாகிவிடும். ஏற்கெனவே உரங்கள் விலை மூட்டைக்கு 400 முதல் 900 வரை உயர்ந்துள்ளது. விவசாய வேலைக்கு கூலியும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சம்பளம் உயர்ந்தாலும்கூட ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.
சாகுபடி குறையும்