இயற்கை விவசாயம் செய்வோர் அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம் :

இயற்கை விவசாயம் செய்வோர்  அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ச.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இயற்கை வேளாண்மை மூலம் விளை பொருட்கள் உற்பத்தி செய்து இயற்கை விளை பொருள் பதனிடுவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்கக சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அங்கக சான்று பெற தனிநபரோ, குழுவாகவோ பதிவு செய்யலாம்.

கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோரும் பதிவு செய்யலாம். அங்கக முறைப்படி இயற்கை வழி வேளாண்மையில் இயற்கை உரம், தாவர பூச்சிக் கொல்லிகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தக் கூடாது. இயற்கை வேளாண்மை பண்ணை தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

பழவகை பயிர்கள், காய்கறி பயிர்கள், தானிய பயிர்கள் மற்றும் பயறு வகை பயிர்கள், பருத்தி, எண்ணெய்வித்துப் பயிர்கள் அனைத்துக்கும் விவசாயிகள் இயற்கை வேளாண்மை சாகுபடி முறைகளை கையாண்டு அங்கக சான்றளிப்புக்கு பதிவு செய்து பயன்பெறலாம். பதிவு கட்டணம் தனிநபர், சிறுகுறு விவசாயிகள் ரூ.2,700, பிற விவசாயிகள் ரூ.3,200, குழு அமைப்பு பதிவு ரூ.7,200, வணிக நிறுவனம் ரூ.9,400 செலுத்த வேண்டும்.

இந்த சான்று பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் விண்ணப்ப படிவம் 3 நகல், பண்ணையின் பொது விவர குறிப்பு 3 நகல், பண்ணையின் வரைபடம், மண்பரிசோதனை மற்றும் பாசனநீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல், நில ஆவணம், பான்கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, பதிவு கட்டணத்துக்கு உரிய வங்கி வரைவு ஆகியவற்றுடன் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in