

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் தாராபுரம், பல்லடம் பகுதிகளில் உயர் மின்கோபுர திட்ட பணிகளை நிறுத்தவேண்டுமென, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சூரியநல்லூர் கிராமத்தில் சுஸ்லான் நிறுவனமும், பல்லடம் வட்டம் வாவிபாளையத்தில் பவர் கிரிட் நிறுவனமும் போலீஸ் பாது காப்பு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் உயர் மின்கோபுர திட்ட பணிகளைசெய்து வருகிறார்கள். இப்பகுதியில் உயர் மின் கோபுர திட்ட பணிகள்மேற்கொள்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. இதனால் வழக்கு முடியும் வரை, மேற்கண்ட பணிகளை நிறுத்தவேண்டும். இப்பணிகளுக்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலமாக விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெறுவதுடன், அவர்களை விடுதலை செய்யவேண்டும். வழக்கு முடியும் வரை உயர் மின்கோபுர திட்ட பணிகளை நிறுத்துவதுடன், விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச வேண்டும். விவசாயிகள் விடுதலை செய்யப்படும்வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் இரா.சண்முக சுந்தரம், உழவர் உழைப்பாளர் கட்சியின் சோமசுந்தரம், பல்லடம் தொகுதி மதிமுக வேட்பாளர் க.முத்துரத்தினம் மற்றும் பெண்கள் என பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயனிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.