ஊரடங்கின் போது வெளியே சுற்றினால் நடவடிக்கை : ஈரோடு எஸ்.பி. தங்கதுரை எச்சரிக்கை

ஊரடங்கின் போது வெளியே சுற்றினால் நடவடிக்கை :  ஈரோடு எஸ்.பி. தங்கதுரை எச்சரிக்கை
Updated on
1 min read

இரவு ஊரடங்கின் போது வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என ஈரோடு எஸ்பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கின்போது, தேவையில்லா மல் வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு எஸ்பி தங்கதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எஸ்பி கூறியதாவது:

இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை சரக்குவாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் என அரசு அனுமதித்துள்ள வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. அதேபோல், தொழிற் சாலைகளில் பணிபுரிபவர்கள் அவர்களது நிறுவனத்தின் அடையாள அட்டையும், பணி அனுமதி கடிதத்துடன் வந்தால் இரவில் அனுமதிக்கப்படுவார்கள். சாலைகளில் வாகனம் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், இருவழி சாலைகள் இரவு 10 மணிக்குப் பின்னர் ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படும்.

ஊரடங்கை மீறி சாலைகளில், பொது இடங்களில் நடமாடும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள், மாவட்டத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படும். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது, தேவை ஏற்பட்டால், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர், அத்தியாவசியமான சரக்கு வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு தீவிரம்

சேலம் மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 32 காவல் நிலையங்களைச் சேர்ந்த ரோந்து போலீஸாரும் வழக்கமான இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுவர். கண்காணிப்பு தேவைப்படும் இடங்களில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in