கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் - திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மீது நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் -  திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மீது நடவடிக்கை :  ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று 226 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 376 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 15 ஆயிரத்து 860 பேர் குணமடைந்துள்ளனர். 1364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு குறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பெருந்துறை, ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர் அரசு மருத்துவமனைகளில் 684 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 227 நபர்களும், புற நோயாளிகள் 58 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 71 ஆயிரத்து 292 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று (20-ம் தேதி) 2820 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டு நடைமுறைகளை திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறினால், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in