

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் சீதாராம் பாளையம், சூரியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று தடுப்பூசி போட சென்றவர்களை தடுப்பூசி இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதுபோல் சீதாராம்பாளையம் மற்றும் சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிபற்றாக்குறை உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தடுப்பூசி அனை வருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்த மக்களை, தடுப்பூசி தட்டுப்பாடு எனக் கூறி மருத்துவர்கள் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.