

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் 3-வது நுழைவுவாயில் வழியாக மினி வேன் ஒன்று வந்தது. அந்த மினி வேனை போலீஸார் மறித்து விசாரணை நடத்தியதில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமரா மற்றும் கேமரா காட்சிகளை பார்வையிடுவதற்கான எல்இடி டிவி ஆகியவை பொருத்துவதற்கு பொதுப்பணித் துறையினரால் நியமிக்கப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் என்று தெரியவந்தது.
ஆனால், அந்த மினி வேனில் தேர்தல் பணி என்று குறிப்பிடும் வகையில் எந்த வில்லையோ, மினி வேனில் வந்தவர்களிடம் அடையாள அட்டையோ இல்லாததால் திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தகவலறிந்த கோட்டாட்சியரும், திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான என்.விசுவநாதன், மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.வேதரத்தினம் (குற்றம்- போக்குவரத்து) ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் விசுவநாதன் கூறும் போது “வாக்கு எண்ணிக்கை நாளில் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்வதற்காக எல்இடி டிவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக நியமிக்கப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் அதற்கான உபகரணங்களுடன் வந்துள்ளனர். மற்றபடி பிரச்சினை எதுவும் இல்லை’’ என்றார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அங்கு சென்று விசாரித்தார்.