

வேலூர் மாவட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு காலை நேரத்தில் டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், வேலூரில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நேர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்தில் நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வேலூரில் இருந்து இரவு நேரங்களில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் நேற்று முதல் காலை நேரத்தில் இயக்கப்படுகின்றன.
அதன்படி, தினசரி காலை 5.30 மணிக்கு தூத்துக்குடிக்கு முதல் பேருந்து இயக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து. கன்னியா குமரிக்கு காலை 6.30 மணிக்கும், மார்த்தாண்டத்துக்கு காலை 8.30 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.15 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 10.30 மணிக்கு மார்த்தாண்டத்துக்கும், காலை 11 மணிக்கு செங்கோட்டைக்கும், காலை 11.45 மணிக்கு மதுரைக்கும் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு நேர மாற்றம் காரணமாக முதல் நாளிலே தென்மாவட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னைக்கு இரவு 7 மணி வரை மட்டுமே
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் தாம்பரத்துக்கு இரவு 7 மணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். காஞ்சிபுரம், திருத்தணிக்கு இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு மாலை 4.30 மணி வரை, சேலத்துக்கு மாலை 4 மணி வரை, ஓசூருக்கு மாலை 5.30 மணி வரை, திருப்பத்தூருக்கு இரவு 8 மணி வரை, குடியாத்தத்துக்கு இரவு 9 மணி வரை, திருச்சி மற்றும் கும்பகோணத்துக்கு பிற்பகல் 2.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், அரசு வழித்தடங்களை கடைப்பிடித்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதை கண்காணிக்க பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பேருந்தின் பின்வாசல் வழியாக ஏறி முன்வாசல் வழியாக இறங்க வேண்டும்என்று அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.