

அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை ரயில்வே பாயின்ட்மேன் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பை அருகே வாங்கனி நகரம் உள்ளது. அங்குள்ள ரயில் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி மாலையில் பார்வையற்ற பெண், தனது 6 வயது மகனுடன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்டவாளத்தில் தவறி விழுந்தான். பார்வையற்ற தாயால் ஓடிச் சென்று குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.அவர் தண்டவாளத்தில் ஓரத்தில் நின்று கூக்குரலிட்டார். சிறுவனால் பிளாட்பாரத்தின் மீது ஏற முடியவில்லை. தண்டவாளத்தை விட்டு விலகி நிற்கவும் தெரியாமல் கதறி அழுதான்.
சற்று தொலைவில் பச்சைக் கொடி காட்டுவதற்காக நின்று கொண்டிருந்த ரயில்வே பாயின்ட்மேன் மயூர், விபரீதத்தை உணர்ந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்து குழந்தையைத் தூக்கி பிளாட்பாரத்தில் வீசினார். நொடிப் பொழுதில் தானும் பிளாட்பாரத்தில் ஏறி உயிர் தப்பினார். அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்தபோது தனது உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையின் உயிரை ரயில்வே ஊழியர் காப்பாற்றியதற்கு அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரயில்வே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாயின்ட்மேனை கவுரவித்துள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது பார்வையற்ற பெண், குழந்தையுடன் வாங்கனி ரயில் நிலையத்தில் நுழைந்தது எப்படி? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.