கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு கேட்டு ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மனு :
கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர ஒலி, ஒளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விவரம்: இச்சங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட ஒலி, ஒளி அமைப்பாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 8-ம் தேதி முதல் கோயில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுபநிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு தொழில்களும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டிலிருந்து தற்போதுவரை ஒலி, ஒளி அமைக்கும் தொழில் மட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை கோயில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். அதன்மூலமே எங்களது வாழ்வாதாரம் மேம்படும். தற்போதைய கரோனா கட்டுப்பாடுகளில் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு தளர்வு அளிக்க வேண்டும்.கோயில் நிகழ்ச்சிகள், சுபநிகழ்ச்சிகள், அரசு, பொதுநிகழ்ச்சிகளில் ஒலி, ஒளி அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இத் தொழிலை நம்பியிருப்பவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தமிழகம் முழுவதும் ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் போன்ற தொழில்களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். திருமணங்கள், கோயில் விழாக்கள் நடைபெறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் இந்த தொழிலாளர்களுக்கு வேலை இருக்கும்.
தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை 50 சதவீத கொள்ளளவுடன் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 50 சதவீத விருந்தினர்களுடன் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுபோலமதம் சார்ந்த நிகழ்ச்சிகள், திருவிழாக்களை நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
