திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் - வேளாண் கூட்டுறவு கடன் சங்க மோசடி வழக்கில் மேலும் 4 பேர் கைது :

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் -  வேளாண் கூட்டுறவு கடன் சங்க  மோசடி வழக்கில் மேலும் 4 பேர் கைது :
Updated on
1 min read

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மோசடி வழக்கில் மேலும் 4 பேரை நாமக்கல் வணிக குற்றப்புலனாய்வுக் காவல் துறை யினர் கைது செய்தனர்.

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மல்லசமுத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கம் மூலம் பயிர்கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்ட தொகையை கடன் சங்கத்தில் முறையாக வரவு வைக்காததுடன் ரூ. 2.39 கோடி மதிப்பில் பயிர்கடன் வழங்கியதில் மோசடி நடந்திருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் வெங்கடாசலம் நாமக்கல்லில் உள்ள மாவட்ட குற்றப்புலனாய்வு போலீஸில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வங்கிச் செயலாளர் ரவி (57) உள்பட 13 பேருக்கு மோசடியில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோர் மாதம் வங்கியின் முன்னாள் துணைத்தலைவர் தங்கவேல் (60), ஓய்வு பெற்ற பணியாளர்கள் கதிர்வேலு (65), தங்கராஜ் (62), முன்னாள் நகை மதிப்பீட்டாளர் அம்புராயன் (64) உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கியன் முன்னாள் நிர்வாகக் குழு தலைவர் சபரி (29), நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பெரியசாமி (56), சீனிவாசன் (49), மகேஸ்வரி (45) ஆகிய 4 பேரை வணிக குற்றப்புலனாய்வு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in