

திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீ தொண்டு வாரத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் இருந்து சைக்கிள் பயணம் வந்த தீயணைப்பு வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ஏப்.14-ம் தேதி முதல் ஏப்.20-ம் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதை யொட்டி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின்போது, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் அஞ்சலி செலுத்தப் படுவதுடன், தீயணைப்பு துறையின் சேவைகள் மற்றும் தீயணைப்புத் துறை கருவிகளை முறையாக பராமரிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், தமிழ்நாடு தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தீயணைப்பு வீரர்கள் 45 பேர் விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று சைக்கிள் பயணமாக வந்தனர். இந்த பயணக் குழுவில் மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் ராபின் காஸ்ட்ரோ (விழுப்புரம்), மனோ பிரகாசம் (தஞ்சாவூர்), லோகநாதன் (கடலூர்), வடிவேலு (திருவாரூர்) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
திருச்சி வந்த தீயணைப்பு குழுவினருக்கு திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா தலைமையில், உதவி மாவட்ட அலு வலர் கருணாகரன், திருச்சி தீய ணைப்பு நிலைய அலுவலர் மெல்க்யூராஜா ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘தீயணைப்பு கருவிகளை முறையாக பராமரிக்காவிட்டால், தீ விபத்து ஏற்படும் நேரத்தில் அவை முறையாக செயல்படாமல், தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு பெரிய அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் நேரிட வாய்ப்பு உண்டு. எனவே, தீயணைப்பு கருவி களை முறையாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களின் சேவையை நினைவுகூரும் நோக்கிலும் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும், எந்த நேரத்திலும் தீ தடுப்பு, மீட்பு தொடர் பான அழைப்பு வரலாம் என்ப தால் தீயணைப்பு வீரர்கள் தங்கள் உடல்நிலையை ஆரோக்கியமாக வும், கட்டுக்கோப்பாகவும் வைத்தி ருக்க உதவும் நோக்கில் சைக்கிள் பயணம் நடத்தப்பட்டது’’ என்றனர்.