ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை - திருப்பத்தூர் அருகே கோயிலில் 8 சிலைகள் மாயம் : சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை

ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை -  திருப்பத்தூர் அருகே கோயிலில் 8 சிலைகள் மாயம் :  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரணியூர் கோயிலில் 8 சிலைகள் மாயமானது குறித்து சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நகரத்தாரின் 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்பக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் 80 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த நிலையில் இருந்தது. 1941-1944 காலகட்டத்தில் இக்கோயிலை நகரத்தார் புதுப்பித்துக் கட்டினர்.

தற்போது இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் செயல் அலுவலராக காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சுமதி உள்ளார்.

அவர், 1948-ம் ஆண்டு இரணியூர் கோயில் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, சோமாஸ்கந்தர், ஸ்கந்தர், பிரியாவிடை அம்மன், தனி அம்பாள், ஞானசம்பந்தர், சுந்தர மூர்த்தி, நித்திய உற்சவ சுவாமி, நித்திய உற்சவ அம்பாள் ஆகிய 8 சிலைகள் காணாமல்போனது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் இதுபற்றி புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிலைகள் காணாமல் போனது குறித்து அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்த சிலைகள் மாயமான சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in