

பண்ணந்தூர் அருகே நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பண்ணந்தூர் ஊராட்சி தருமதோப்பு கிராம மக்கள் கோரிக்கை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
தருமதோப்பில், 55 குடும்பங் களுக்கு மேல் வசித்து வருகிறோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மழை பெய்தபோது, தெரு முழுவதும் மழை நீர் சூழ்ந்து கடும் அவதியுற்றோம். இதற்கு மழை நீர் மற்றும் பண்ணந்தூர் சின்ன ஏரி என்கிற புதுக்கோட்டை ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தான் காரணம்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரால் தொடர்புடைய அலு வலர்கள்ஆய்வு செய்து 3 மாதங்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் 4 மாதங்களாகி யும் இன்றுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி- முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை கனமழை பெய்தது.
இதனால் வீடுகளில் நீர் புகுந்தது எனவே, மழை நீரும், ஏரியின் உபரிநீரும் வெளியேற வடிகால் அமைத்தும், ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பழைய கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.