

போச்சம்பள்ளி அருகே குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெருகோபனப்பள்ளி அண்ணாநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் சரிவர செய்யவில்லை. சீராக குடிநீர் வழங்கக்கோரி தொடர் புடைய ஊராட்சி நிர்வாகம், அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங் களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீராக குடிநீர் வழங்கக்கோரி முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பெருகோபனப்பள்ளி ஊராட்சி தலைவர் முரளி மற்றும் மத்தூர் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.