

ஈரோடு மாவட்டத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் 3384 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மாவட்டத்திற்கு 5000 கரோனா தடுப்பூசி மருந்துகள் நேற்று வந்துள்ளதாகவும், ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கண்டறியும் வகையில் பரிசோதனை முகாம்கள் மற்றும் நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இலவசமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு நேற்று சிறப்பு முகாம் மூலம் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரோனா கண்டறியும் சோதனை மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 572 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 15 ஆயிரத்து 528 பேர் குணமடைந்துள்ளனர். 892 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 152 பேர் கரோனா தொற்றால் இறந்துள்ளனர். கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருந்துறை, ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர் அரசு மருத்துவமனைகளில் 684 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 பேரும், புற நோயாளிகள் 38 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவை தவிர, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள பல்வேறு கல்லூரிகளில் 2700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 242 படுக்கைகள் தயாராக உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 426 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 446 பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (15-ம் தேதி) வரை 97 ஆயிரத்து 441 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு 5,000 தடுப்பூசிகள் வந்துள்ளது. எனவே, கரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.