தொற்றின் தன்மைக்கு ஏற்ப பிரித்து சிகிச்சைக்கு அனுப்ப - ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் கரோனா பரிசோதனை மையம் :
கரோனா பாதிக்கப்பட்டவர்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோட்டில் ஸ்கிரினிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் தன்மைக்கு ஏற்ப, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ப்பதா அல்லது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதா என்பது முடிவு செய்யப்படுகிறது. இதற்கென, ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனைகள், ஈரோடு மாநகராட்சி மண்டபம், கோபி கலை அறிவியல் கல்லூரி, பவானி, மொடக்குறிச்சி ஆகிய 6 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டது.
இதன்படி, ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் இங்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட ஐந்து வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சோதனை முடிவின் அடிப்படையில், தொற்றின் தன்மை கண்டறியப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தினமும் 40 முதல் 45 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள், இந்த ஸ்கிரினிங் சென்டருக்கு அழைத்து வரப்பட்டு, நோயின் தன்மை, பாதிப்பு குறித்து கண்டறியப்படுகிறது. அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாமா என்பது முடிவு செய்யப்படுகிறது.
வீடுகளில் வசதிகள் இல்லை என்றால் அவர்களுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை தேவைப்படுவோர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மாநகராட்சிப் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அந்தந்த பகுதி சுகாதாரத் துறையினர், செவிலியர்கள் கண்காணித்து தேவையான சிகிச்சைகள் மற்றும் வசதியை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
