

மண்ணின் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் கோடை உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எலுமிச்சகிரி ஐசிஏஆர் வேளாண்மை அறிவியல் மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையினை கொண்டு விவசாயிகள் மண்ணின் வளத்தை மேம்படுத்த கோடை உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள், முட்டைகள் அழிக்கப்படுவதுடன் படைப்புழுவின் வாழ்க்கை சுழற்சிக்கு துணையாக உள்ள களை செடிகளும், அதன் விதை களும் அழிக்கப்படுகிறது. மழை நீரும் மண்ணில் சேமிக்கப்படுகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டமும், நுண் உயிரிகளும் அதிகரிக்கும்.
கோடை உழவினால் மண்ணின் மேல் பகுதியில் உருவாகும் புழுதி படலம் பங்குனி, சித்திரை மாத கோடை வெயில் வெப்பம் பூமிக்குள் செல்லாமல் தடுக்கிறது.
இதனால் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படு வதுடன் கோடை மழை நீர் வழிந்தோடாமல் வயலில் தேங்கி நிற்க உதவுகிறது. மண்ணின் இறுக்கம் தளர்ந்து இலகுவாக மாறும். இந்த கோடை உழவின் போது ஏக்கருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
துவரை உள்ளிட்ட ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25 - 30 செ.மீ. ஆழ உழவும், சோளம் உள்ளிட்ட மே லோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15 - 20 செ.மீ. ஆழ உழவும்அவசியம்.
அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும் போது குறுகிய வெட்டுக்கள் மேற் பரப்பு மண்ணில் உண்டாகிறது. அடிமண் மூடுவதை தடுக்க செங்குத்து நிலப்போர்வை அமைக்கப்படுகிறது. உழுதலை தொடர்ந்து கட்டி உடைத்தல், பரம்பு அடித்தல் முடிந்த பின் வயல் விதைப்பிற்கு தயாராக இருக்கும் என்றார்.