

ஈரோடு மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட, கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உரம் விற்பனை நிலையங்கள் உட்பட 556 உர விற்பனை நிலையத்தில் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உர விற்பனை நிலையங்களை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது, உரிய படிவங்கள் பெற்று உரங்களை கொள்முதல் செய்வது, விற்பனை ரசீது, விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது தொடர்பாக அனைத்து உரம் விற்பனையாளர்களுக்கும் ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது. இதனை மீறும் உரம் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, ஈரோடு மாவட்டத்தில் யூரியா 6260 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1210 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 3960 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 7765 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்திட வேண்டும். விவசாயிகள் உரங்களை வாங்கும் போது, மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலையினை பார்த்து உரிய ரசீது பெற்று உரங்களை வாங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.