

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை(தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,902 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு துணை ராணுவத்தினர், ஆயுதப்படை பிரிவினர் மற்றும் போலீஸார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர, வேட்பாளர்களின் சார்பில் நியமிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று வருவதற்கு ஏற்ப தேவையான இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணும் இடத்தில் ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்து வாக்குகளை எண்ணும் வகையில் 14 மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணிக்கான அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியது:
வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் இருக்கும். ஒரு மேஜைக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் வீதம் அனுமதிக்கப்படுவர்.
ஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள்.
வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் எண் ஆகியவற்றைக் காண்பித்த பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.
14 மேஜைகளின் எண்ணிக்கைகளையும் கூட்டி அந்த சுற்றில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்து, கையெழுத்திட்டு அதிகாரபூர்வமாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பார். தொடக்கத்தில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும் என்றனர்.