மங்களூரு விபத்தில் மணப்பாடு மீனவர் மாயம் : விரைவாக மீட்கக் கோரி குடும்பத்தினர் மனு

மங்களூரு கப்பல் விபத்தில் மாயமான மணப்பாடு மீனவர் டென்சனை மீட்கக் கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அவரது மனைவி ராணி, 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர். (அடுத்த படம்) டென்சன்.
மங்களூரு கப்பல் விபத்தில் மாயமான மணப்பாடு மீனவர் டென்சனை மீட்கக் கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அவரது மனைவி ராணி, 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர். (அடுத்த படம்) டென்சன்.
Updated on
1 min read

கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே சரக்கு கப்பல் மோதி, படகுமூழ்கியதில் காணாமல் போன மணப்பாடு மீனவரை மீட்கக் கோரி, அவரது குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

கேரள மாநிலம் வேப்பூர் பகுதியில் இருந்து ஜாபர் என்பவருக்கு சொந்தமான 'அரப்பா' என்ற விசைப்படகில், தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 11-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கடந்த 13-ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில்மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த 'ஏபிஎல் லீ ஹவாரே' என்ற சரக்குக் கப்பல், மீன்பிடிப் படகு மீது மோதியது. இதில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ் ஆகியோர், விபத்து ஏற்படுத்திய கப்பல் ஊழியர்களாலேயே உயிரோடு மீட்கப்பட்டனர்.

மேலும், மூன்று மீனவர்களது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. 9 மீனவர்களை காணவில்லை. இதில், மணப்பாடைச் சேர்ந்த டென்சன் என்பவரும் ஒருவர். இவர்களை, இந்திய கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

டென்சனை மீட்கக் கோரி அவரது மனைவி ராணி, 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். `இங்கே உரிய மீன்பிடி தொழில் இல்லாததால் டென்சன் கேரளத்துக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். தற்போது விபத்தில் அவர் மாயமாகியுள்ளார். அவரை நம்பியே எங்கள் குடும்பம் உள்ளது. அவரைவிரைவாக மீட்க வேண்டும்’ எனஅந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அனுப்பியுள்ள மனுவில், `மங்களூரு விபத்தில் மாயமான மீனவர்களை விரைவாக பத்திரமாக மீட்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in