

வேலூர் சத்துவாச்சாரி பளு தூக்கும் பயிற்சி மையத்தை திறக்க மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘‘நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பலர் படித்துக் கொண்டும், கூலி வேலை செய்தும் அரசின் பளுதூக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறோம். தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்றுள்ளோம். சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய அளவுக்கு தகுதி பெற்றுள்ளோம்.
இங்கு முன்பு இருந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பல பதக்கங்களை பெற்று ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 10-ம் தேதி கரோனா தொற்று காரணமாக மறு உத்தரவு வரும் வரை விளையாட்டு பயிற்சி மையத்தை மூடுவதாக கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
கரோனா பரவலுக்கு முன்பிருந்தே விளையாட்டு பயிற்சி மையத்தில் வெளியாட்கள் காரணமின்றி உள்ளே வருவதோ, பயிற்சி செய்வதோ அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் பெற்றோர்களுக்கும் அதே விதி கடைபிடிக்கப்படுகிறது. காரணமின்றி அவர்களும் வருவதில்லை. வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
கரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு நாங்கள் அரசின் அறிவுரை விதிகளின்படி முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தலை முறையாக பின்பற்றுகிறோம்.
தமிழகத்தில் அனைத்து அரசின் விளையாட்டு பயிற்சி மையங்களும், பயிற்சி யாளர்களுக்கு மட்டும் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது. எங்கள் உயிருக்கு நிகராக நேசிக்கும் இந்த பயிற்சியை தொடர அரசின் பளுதூக்கும் பயிற்சி மையம் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.