

சேலத்தில் சிறுமி ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட வழக்கில், தாயின் வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் தொடர்பாக ஆய்வு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவர் தனது பேத்தியை, தொழில் அதிபர் கிருஷ்ணன் என்பவருக்கு தனது மகள் விற்பனை செய்து விட்டதாகவும், பேத்தியை மீட்டு கொடுக்க வேண்டும் என சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து, சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக தொழில் அதிபர் கிருஷ்ணன், சிறுமியின் தாய் சுமதி, தந்தை சதீஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து,, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுமியை ரூ.10 லட்சத்துக்கு விற்று விட்டதாக சிறுமியின் தாய் சுமதி தனது உறவினரிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதையடுத்து, சுமதியின் வங்கி சேமிப்புக் கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து போலீஸர் விசாரணை நடத்தி வருகின்றனர்.