திருச்சி மாவட்டத்தில் - ஏப்.26-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி திருவிழா :

திருச்சி மாவட்டத்தில்  -  ஏப்.26-ம் தேதி வரை  கரோனா தடுப்பூசி திருவிழா :
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. இதை ஏப்.26-ம் தேதி வரை நடத்த மாவட்ட சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், தற்போது 1,415 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஏப்.14 (நேற்று) முதல் ஏப்.16-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் திருச்சி மாவட்டத்தில் ஏப்.26-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 82 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் 42 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் 6,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மருந்துக் கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் முறையே 80:20 என்ற விகிதாச்சார அடிப்படையில் வருகின்றன.

மாவட்டத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு தேவையான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஓரிரு நாட்களில் அடுத்த கட்டமாக கரோனா தடுப்பூசிகள் திருச்சி மாவட்டத்துக்கு வந்துவிடும்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்ப்பதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடை பிடிப்பதுடன், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வதுடன், முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in