

தூத்துக்குடியில் சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் அமைந்துள்ள தியேட்டருக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இரவு காட்சிக்கு படம் பார்க்க 5 பேர் வந்தனர். அவர்கள் டிக்கெட் எடுத்துவிட்டு உள்ளே செல்லும் போது, 5 பேரும்மது போதையில் இருந்ததால் தியேட்டருக்குள் செல்ல அவர்களை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்து 5 பேரையும் அனுப்பி விட்டனர். படம் பார்க்க அனுமதி அளிக்காததால் ஆத்திரமடைந்த 5 பேரும் மீண்டும் சென்று மதுஅருந்தியுள்ளனர். பின்னர், இரவு11 மணியளவில் மீண்டும் தியேட்டருக்கு வந்த அவர்கள், ஒரு மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீவைத்து தியேட்டர் வாசலில்வீசியுள்ளனர். அந்த பெட்ரோல் குண்டு தரையில் விழுந்து வெடித்துள்ளது. அதில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பின்னர் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்ததும் தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும்போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக, தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.