

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி (60). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, திருப்பூரில் நடந்த உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகை , ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தன.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போச்சம்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் பண்ணப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சியப்பன் (45), ஆத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் (35) உள்ளிட்ட 2 பேரும் ஈடுபட்டது தெரிந்தது. 2 பேரும் டிவி பழுது நீக்கும் தொழில் செய்து வருவது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீஸார், திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.