

அரசின் உத்தரவை மீறி திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை சில்லறை வியாபாரம் நடைபெற்றதால் மார்க்கெட்டின் அனைத்து வாயில் கதவுகளையும் மாநகராட்சி அலுவலர்கள் பூட்டினர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் காய்கனி வணிக வளாகங்களில் சில்லறை வணிகத்துக்கு ஏப்.10-ம் தேதி முதல் தடை விதித்து கடந்த 8-ம் தேதி அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் சில்லறை வணிகம் நடைபெறாது என்றும், சில்லறை வியாபாரிகளுக்கு ஜி கார்னர் மைதானத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும், அங்கு கழிப்பிடம், குடிநீர், மின் விளக்கு ஆகிய வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் அமைத்துத் தரப்பட்டன.
இதனிடையே, காய்கறிகளை காந்தி மார்க்கெட்டில் இருந்து எடுத்துச் சென்று ஜி கார்னரில் வைத்து வியாபாரம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதா கக் கூறி, மொத்த வியாபாரத்தையும் ஜி கார்னர் மைதானத்துக்கு மாற்ற வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, மொத்த வியாபாரிகள் தரப்பில் இரு வேறு கருத்துகள் வெளியாகி வந்தன.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சில்லறை வியாபாரிகள் சிலர் ஜி கார்னர் மைதானத்தில் காத்திருந்த நிலையில், மொத்த வியாபாரிகள் யாரும் அங்கு செல்லவில்லை.இதையடுத்து, ஜி கார்னரில் இருந்த சில்லறை வியாபாரிகளும் நள்ளிரவுக்கு மேல் காந்தி மார்க்கெட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது. இதையடுத்து, ஜி கார்னரில் இருந்து சென்றவர்களும் கடைகளைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், நேற்று காலை 9 மணியளவில் மார்க்கெட்டுக்கு சென்று சில்லறை வியாபார கடைகளை மூடிவிட்டு, அனைத்து நுழைவுவாயில் கதவுகளையும் பூட்டினர். அப்போது, இனி இங்கு அரசின் மறு உத்தரவு வரும் வரை சில்லறை வியாபாரம் இருக்காது என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.