உரம் விலை உயர்வைக் கண்டித்து - ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் :

உரம் விலை உயர்வைக் கண்டித்து -  ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்  :
Updated on
1 min read

உரம் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 70 பேர், அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் முன் தரையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறும்போது, “நெல், கரும்பு கொள்முதல் விலையை மிக சொற்ப அளவில் உயர்த்தியுள்ளனர். 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தருவதாக அரசு அறிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாயிகள் வாழ்ந்து வரும் நிலையில், உரம் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

தொடர்ந்து, போராட்டத்துக்குத் தலைமை வகித்த அய்யாக்கண்ணுவை ஆட்சியரிடம் மனு அளிக்க வருமாறு போலீஸார் அழைத்தனர். அப்போது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நேரிட்டது.

பின்னர், ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியைச் சந்தித்து மனு அளித்து விட்டு திரும்பிய அய்யாக்கண்ணு, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசின் உத்தரவு வரும் வரை திருச்சி மாவட்டத்தில் உர விற்பனை நிறுவனங்கள் பழைய விலைக்கே உரம் விற்பனை செய்யவும், கூடுதல் விலைக்கு விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதி அளித்தார்.

இதனால் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம். மேலும், நாங்கள் டெல்லிக்குச் செல்வதில் எந்த தடையும் இல்லை என்று ஆட்சியர் கூறினார்’’ என்றார்.

தமாகா மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in