

3-வது தேசிய சீக்கிய விளையாட்டு போட்டிகள் கடந்த ஏப்.6-ம் தேதி முதல் ஏப்.11-ம் தேதி வரை டெல்லியிலுள்ள காமன்வெல்த் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் 16-வயதுக்குட்பட்டோர் பிரிவில் திருச்சியை சேர்ந்த ஆ.சூர்யா, மோ.பி.சுகித்தா, பா.கவியரசி, ரா.ச.தருண் வித்யாதரன், சு.மங்களலட்சுமி, சு.ராம், ரா.ரக்ஷதிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களில் ஆ.சூர்யா தனித்திறமை, சுருள் வீச்சு மற்றும் கம்பு சண்டையில் 3 தங்க பதக்கங்களை வென்றார்.
மோ.பி.சுகித்தா தனித்திறமை, சுருள் வீச்சு ஆகியவற்றில் தலா 1 தங்கம், கம்பு சண்டையில் 1 வெள்ளி பதக்கங்களை வென்றார். மற்ற சிலம்ப வீரர்கள் அனைவரும் தனித்திறமையில் ஒரு தங்கம், கம்பு சண்டையில் ஒரு தங்கம் என ஒவ்வொருவரும் 2 தங்கப் பதக்கங்களை வென்றனர். அதேபோல, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் மோ.பி.சுகித்தா தங்கம் வென்றார்.
இதையடுத்து டெல்லியிலிருந்து திருச்சி திரும்பிய வீரர், வீராங்கனைகளை திருச்சி ரயில்வே எஸ்.பி த.செந்தில்குமார் நேரில் வரவழைத்து, அனைவருக்கும் புத்தகங்களை பரிசளித்து பாராட்டினார். வீரர், வீராங்கனைகளின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.