

தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் சிப்காட் வளாகத்தில் சிகால் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்துக்கு சொந்தமான கிட்டங்கி அமைந்துள்ளது. இந்த கிட்டங்கியில் இருந்து பொருட்கள் சரக்கு பெட்டகங்களில் ஏற்றப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.
அதன்படி ஈரோடு, திருப்பூர்,மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏற்றுமதிக்காக 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஜவுளிகள், ரெடிமேட் ஆடைகள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், பேப்பர் பண்டல்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று பிற்பகல்2 மணி அளவில் இந்த கிட்டங்கியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை துணைஇயக்குநர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, தெர்மல் நகர், சிப்காட், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதேபோன்று 4 தனியார் நிறுவனங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், சிப்காட் காவல் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.