

சேலம் மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு பணிக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 350 பேர் வந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி, சங்ககிரி அடுத்த மங்கரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி, தலைவாசல் அருகேயுள்ள தொழில்நுட்பக் கல்லூரி என 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு பணிக்காக நேற்று எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 85 வீரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 85 பேர், தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு போலீஸார் 180 பேர் என மொத்தம் 350 வீரர்கள் சேலம் வந்துள்ளனர். இவர்கள் 4 வாக்குச் சாவடி மையத்துக்கும் பணி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.