ஈரோட்டில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததில் - உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1.58 கோடி திரும்ப ஒப்படைப்பு : ரூ.72.76 லட்சம் கருவூலத்தில் இருப்பு

ஈரோட்டில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததில் -  உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1.58 கோடி திரும்ப ஒப்படைப்பு :  ரூ.72.76 லட்சம் கருவூலத்தில் இருப்பு
Updated on
1 min read

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1.58 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்ட நிலையில், ரூ.72.76 லட்சம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்ட பறக்கும் படையினர், விதிகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்களைக் காட்டினால், அந்த தொகை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை மொத்தம் ரூ.2 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரத்து 938 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1 கோடியே 58 லட்சத்து 63 ஆயிரத்து 230 உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதம் உள்ள ரூ.72 லட்சத்து 76 ஆயிரத்து 708 கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 128 பேரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 77 பேரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீதம் 51 பேரின் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உரிய ஆவணங்களை அளித்தால், கைப்பற்றப்பட்ட ரொக்கம் திருப்பி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாபாரிகள் மகிழ்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in