கரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கரோனா விதிமுறைகளை பின்பற்றாத  வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை :  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் அரசின் கரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

விதிமுறைகள் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். 3 முறைகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், முகக்கவசம் அணிந்து வருவதை கடைபிடிக்காத சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்றவைகள் தற்காலிகமாக மூடப்படும்.

உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், கொரியர் நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என பொதுமக்களிடம் அதிக அளவு தொடர்பில் உள்ளவர்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திருமண மண்டபங்களில் நடைபெறவுள்ள சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரத்தினை முன்னதாகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் த.கா.சித்ரா, துணை இயக்குநர் எஸ்.சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in